Advertisement

இரத்த மாற்றம் எவ்வாறு செய்யப்படுகிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்

நவீன மருத்துவத்தின் மூலம் நாம் கற்பனைக்கு எட்டாத வகையில் கூட சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இது மானுடவியல் வளர்ச்சியில் ஒரு அங்கமாகும். இன்றைய மருத்துவத் துறையில் புதிய தொழில்நுட்பங்களை உட்புகுத்தி அதன் மூலம் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. எடுத்துக்காட்டாக  ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு குருதி மாற்றம்(Blood Transfusion) மற்றும் உறுப்பு மாற்றம்(Organ Transfusion) ஆகியவை அசாத்தியமாக செய்யப்பட்டு வருகிறது. 


Know about how blood transfusion is done

இந்த இரத்த மாற்றத்தின் தொடக்கமாக, 1881 ஆம் ஆண்டில், மருத்துவர் வில்லியம் ஹால்ஸ்டெட்(William Halsted) அவரது சகோதரி மின்னிக்கு பிரசவத்திற்குப் பிறகு இரத்தக்கசிவு ஏற்படுவதை கண்டு உதவ விரைந்தார். அவர் விரைவாக ஒரு ஊசியை எடுத்து தனது கைகளில் செலுத்தி தனது இரத்தத்தை எடுத்தார், அதை அவரது சகோதரிக்கு மாற்றினார். சில நிச்சயமற்ற நிமிடங்களுக்குப் பிறகு, அவள் குணமடைய ஆரம்பித்தாள். ஹால்ஸ்டெட் அவர்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று தெரியவில்லை. காரணம் அவருக்கும் அவரது சகோதரிக்கும் ஒரே மாதிரியான இரத்த வகை இருந்ததால் மட்டுமே அவரது இரத்தமாற்றம் வெற்றிகரமாக செயல்பட்டது. சில நேரம் நெருங்கிய உறவினர்களிடையே கூட இச்செயல் தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஹால்ஸ்டெட்டின் காலத்தில் இரத்த வகைகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


அதன்பின் பல ஆண்டுகள் இரத்தம் மாற்றம் பற்றிய பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது,  ஆனால் அந்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தது. ஒவ்வொரு முறை முயற்சியின் போதும் பலவிதமான குறைபாடுகள் ஏற்பட்டதை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். குறிப்பாக இரத்தம் மாற்றம் பெற்ற ஒருவருக்கு அதிகமான உடல் வலி, இரத்தம் உறைதல்,  சிறுநீரக பாதிப்பு போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தது. 


1901 ஆம் ஆண்டு ஆஸ்திரிய(Austria) மருத்துவர் கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் இரத்த வகைகளைக்(Blood groups) கண்டுபிடித்தார், இது மனித இரத்த மாற்றத்தின் வெற்றியின் முக்கியமான படியாகும். வெவ்வேறு வகைகளை ஒன்றாகக் கலக்கும்போது, அவை கட்டிகளை உருவாக்குகின்றன என்பதை அவர் கவனித்தார். ஆன்டிபாடிகள்(Antibodies) வேறொரு ஆன்டிஜென்களுடன்(Antigen) கூடிய உயிரணுக்களுடன் இணைக்கும்போது இரத்த அணுக்கள் ஒன்றாக ஒட்டிக்கொள்ளும்.


சோடியம் சிட்ரேட்(Sodium Citrate) என்ற வேதிப்பொருள் இரத்த உறைவு உருவாவதற்குத் தேவையான கால்சியத்தை அகற்றுவதன் மூலம் இரத்த உறைதலை நிறுத்தியதாக 1914 ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். சிட்ரேட்டட் இரத்தம் பிற்கால பயன்பாட்டிற்காக சேமிக்கப்பட்டு பாதிக்கப்பட்டோருக்கு வழங்கலாம் என்பதற்கான முதல் படியாக அமைந்தது.


1916 ஆம் ஆண்டில், அமெரிக்க விஞ்ஞானிகள் ஹெபரின்(Heparin) எனப்படும் இன்னும் திறமையான ஆன்டிகோகுலண்டைக்(anticoagulant) கண்டுபிடித்தனர். இது இரத்த உறைதலை செயல்படுத்தும் என்சைம்களை(Enzymes) செயலிழக்கச் செய்வதன் மூலம் செயல்படுகிறது. இதனைக் கொண்டு இரத்த கொடையாளர்கள் மூலம் அதிகப்படியான இரத்த சேமிக்கப்பட்டு இரண்டாம் உலகப் போரில் காயமுற்ற வீரர்களுக்கு செலுத்தப்பட்டது. அதுவே நாளடைவில் இரத்த வங்கிகள் வருவதற்கு அடிப்படையாக திகழ்ந்தது. 


இவ்வாறு பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு பரிணாமம் அடைந்த இந்த இரத்த மாற்று முறை தற்காலத்தில் எவ்வாறு ஒருவருக்கு செலுத்தப் படுகிறது என்பதைப் பற்றிய அடிப்படை தகவல்களை பார்ப்போம். 


know about how blood transfusion is done

இரத்த கொடையாளிகள் கண்டறிதல்(Identify the Blood Donors): 18 வயதிற்கு மேற்பட்ட நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ள ஒருவர் இரத்த கொடையாளியாக இருக்கலாம். இரத்த வங்கியில் உள்ள மருத்துவ ஆலோசகர் இந்த கொடையாளியின் வயது, உடல் எடை மற்றும் உடல் நலம் ஆகியவற்றைக் குறித்து ஆராய்ந்து அவர் இரத்த தானம் செய்வதற்கான தகுதியுடன் இருப்பதை உறுதிப்படுத்துகிறார்.  இவ்வாறு உறுதிபடுத்தப்பட்ட கொடையாளி தனது இரத்தத்தை தானமாக கொடுக்கிறார். 


இரத்தத்தில் சேகரித்தல் மற்றும் சோதனை இடுதல்(Blood collection and testing): கொடையாளி இடமிருந்து பெறப்பட்ட இரத்தம் முதலில் பாதுகாப்பான முறையில் பேக் செய்யப்படுகிறது. பின்பு அந்த ரத்தத்தின் ஒரு பகுதியை எடுத்து அதனை சோதனை செய்து சோதனையின் மூலம் அந்த ரத்தத்தின் வகை  கண்டறியப்படுகிறது.  பின் அந்த இரத்தத்தின் வைரஸ் சோதனை செய்யப்படுகிறது.  அதாவது எச்ஐவி(HIV), மலேரியா பாரசைட்(Malaria Parasite),  ஹெபடைடிஸ் பி வைரஸ்(Hepatitis B Virus) மற்றும் ஹெபடைடிஸ் சி வைரஸ்(Hepatitis C Virus) ஆகிய வைரஸ்களின் பாதிப்புகள் இரத்தத்தில் உள்ளனவா என்பதைப் பற்றிய சோதனை  செய்யப்படும். 


இரத்தத்தை கூறுகளாக பிரித்தல்(Components Separation): சேகரிக்கப்பட்ட இரத்தம் சோதனைகள் செய்யப்பட்டு சோதனையின் முடிவுகள் எதிர்மறையாக(Negative) வந்தபின் அதனை பல கூறுகளாக பிரிக்கப்படுகிறது. அதாவது பேக்டு ரேட் செல்(Packed Red Cells),  பிளாஸ்மா(Plasma), பிளேட்லெட்டுகள்(Platelets) மற்றும் கிரையோ(Cryo) போன்ற கூறுகளாக இரத்தம் பிரிக்கப்படுகிறது. இந்தக் கூறுகள் தனித்தனியாக பேக் செய்யப்பட்டு அதிக குளிரூட்டப்பட்ட அறையினுள் சேகரிக்கப்படுகிறது. 


நோயாளிகளுக்கு இரத்தமாற்றம் செய்தல்(Blood Transfusion to Patients): நோயாளிகளின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அதன் வகையையும் கண்டறிந்து, அதே வகை உடைய சேகரிக்கப்பட்ட இரத்த கூறுகளுடன் ஒப்பிடப்படுகிறது.  மருத்துவரின் பரிந்துரை ஏற்ப நோயாளிகளுக்கு தேவையான இரத்த கூறுகள் வழங்கப்படுகிறது. இந்த இரத்தக் கூறுகளை  நோயாளியின்  தேவைக்கு ஏற்ப செலுத்தப்படுகிறது. இதன் மூலம் அந்த நோயாளிக்கு ஏற்பட்டுள்ள இரத்த தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த அனைத்து செயல்முறைகளும் ரத்த வங்கிகள் மற்றும் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுகிறது. 

 

இந்த கட்டுரையின் மூலம் நீங்கள், இரத்தமாற்றம் செய்யும் முறையைப் பற்றிய  சில அடிப்படை தகவல்களை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறோம். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருப்பின் இதனை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.