நோய்த் தொற்றை ஏற்படுத்த கூடிய நோய்க்கிருமிகள் பல வகை உண்டு அதில் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகள் மற்றும் புரோட்டோக்டிஸ்டுகள் எனப் பல வகை உண்டு. இருப்பினும் ஒரு குறிப்பிட்ட வகை நோய்க்கிருமிகள் மட்டும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. பொதுவாக வைரஸ், மனிதர்களுக்கு ஏற்படும் 90 சதவிகித நோய்களுக்கு காரணமாக அமைகின்றது. வைரஸ் தொற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பொதுவாக அதிக வீரியம் மிக்கவையாக அல்லது உயிரை கொள்ளக் கூடியதாகவும் உள்ளது. இத்தகைய வைரஸ்களை பற்றியும் அதன் வகைகளைப் பற்றியும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் இந்த கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்வோம்.
வைரஸை ஒரு புரோகாரியோட்(prokaryote) அல்லது யூகாரியோட்(eukaryote) என வகைப்படுத்த முடியாது, ஏனெனில் அது ஒரு செல் அல்ல. எனவே அவற்றின் அமைப்பு என்ன என்பதை மிகவும் சிக்கலான ஒன்று, வைரஸ்கள் பெரும்பாலும் செல்களை விட மிகவும் சிறியதாக உள்ளது, ஒரு வைரஸைப் பார்க்க உங்களுக்கு பொதுவாக எலக்ட்ரான் நுண்ணோக்கி(Electron microscope) தேவைப்படும். வைரஸ்கள் பல வடிவங்களில் வருகின்றன.
நுண்ணுயிர் எதிர்ப்பிகள்(antibiotics) நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை கொள்ளுகின்றன. பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள்(Antifungal medications)பூஞ்சைகளை கொள்ளுகின்றன. இந்த பாக்டீரியாக்களும் பூஞ்சைகளும் ஒரு செல் அமைப்புடன் வாழுகின்றன, ஆனால் வைரஸ் இதுபோல் இல்லை. பாக்டீரியோபேஜ்(bacteriophage) எனப்படும் ஒரு வகை வைரஸ் பாக்டீரியாவை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.
எல்லா வைரஸ்களுக்கும் பொதுவான ஒரு விஷயம் என்னவென்றால், அவற்றில் சில வகையான மரபணு பொருட்கள் உள்ளன. இந்த மரபணு பொருள் டி.என்.ஏ(DNA) அல்லது ஆர்.என்.ஏ(RNA) வடிவத்தில் இருக்கும். வைரஸ்கள் பொதுவாக சில வகையான புரத கோட்களை(protein coat) கொண்டிருக்கும், இது கேப்சிட் என்றும் அழைக்கப்படுகிறது. கேப்சிட் அந்த டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ மரபணு பொருளைப் பாதுகாக்க உதவுகிறது. வைரஸ்கள் மாறுபட்ட கட்டமைப்புகளையும் கொண்டுள்ளது. சில வைரஸ்கள் அவற்றுடன் சிறப்பு நொதிகளையும், சில வைரஸ்களில் வெளிப்புற உறையும் உள்ளது. இவைகள் வைரஸின் இணைப்பிற்கும் மற்றும் அதன் பிரதிபலிப்புக்கும்(replication) உதவியாக உள்ளன. இதில் இரண்டு வகையான வைரஸ் பிரதி சுழற்சிகளை(viral replication) பற்றி நாம் பார்க்கப் போகிறோம்.
வைரஸ் நோய் ஏற்படுத்தும் முறைகள்:
1.லைடிக் சுழற்சி(Lytic Cycle): வைரஸ்களின் இனப்பெருக்கத்திற்கு ஒரு உயிருள்ள பொருள் தேவைப்படுகிறது. எனவேதான் இந்த வைரஸ்கள் செல்களை தாக்குகின்றன,இது வைரஸின் கோஸ்ட் (Host) என்று அழைக்கப்படுகின்றன . முதலாவதாக ஒரு குறிப்பிட்ட செல்லை தேர்ந்தெடுத்து அந்த செல்லில் வைரஸ் தனது டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏவை செலுத்துகிறது. இவ்வாறு உயிரணுக்களில் நுழையும் வைரஸ் தனது இனப்பெருக்கத்தை அந்த செல்லில் தொடங்குகிறது. வைரஸின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட உயிரணு முழுவதும் வைரஸின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.
பின் இனப்பெருக்கம் செய்யப்பட்ட வைரஸ்கள் செல் சவ்வுகளை உடைத்துக்கொண்டு வெளியே வருகின்றன. இந்த வைரஸ்கள் மீண்டும் மற்ற செல்களை தெரிந்தெடுத்து இதேபோன்ற லைடிக்ஸ் சுழற்சி முறையை அந்த செல்லும் செய்கிறது. இதன் காரணமாக நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட உயிரணுக்கள் வெகுவாக குறையத் தொடங்குகிறது. இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப் படுகிறது. இதற்கு லைடிக் சுழற்சி முறை என்று பெயர்.
2.லைசோஜெனிக் சுழற்சி: தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உயிரணுவில் வைரஸானது தனது மரபணுவை அதனுள் செலுத்தி உயிரணுவின் மரபணுவுடன் இனைக்கச் செய்கிறது. இந்த இணைவு நடைபெறும் பட்சத்தில் எந்த பாதிப்புகளும் ஏற்படுவதில்லை. மாறாக உயிரணுவின் மரபணுவுடன் வைரஸின் மரபணு இணைந்து புதிய உயிர் அணுக்கள் உருவாகின்றன. இந்த புதிய உயிரணுக்கள் வைரஸின் மரபணுவால் மறைமுகமாக பாதிக்கப்பட்டிருக்கும். இது அந்த நேரத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது ஆனால் மீண்டும் ஒருமுறை லைடிக்ஸ் வளர்ச்சி முறை அதாவது வைரஸின் பாதிப்பு ஏற்படும் பொழுது எளிதாக அந்த செல்கள் வைரஸினால் பாதிக்கப்படுவது இயல்பானதாக மாறிவிடும். காரணம் அந்த செல்கள் ஏற்கனவே அந்த குறிப்பிட்ட வைரஸின் மரபணுவால் பிணைக்கப்பட்டிருக்கும். அதுதான் லைசோஜெனிக் சுழற்சி.
உங்களுடைய நோய் எதிர்ப்பு மண்டலம் (நோயெதிர்ப்பு மண்டலம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்) வலுவானதாக இருக்கும் வரை இதனால் பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படுவதில்லை. மாறாக நீங்கள் மற்றொரு இணை நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தால் அல்லது குறிப்பிட்ட ஏதேனும் வைரஸ் உங்கள் உடம்பில் பாதிப்பை ஏற்படுத்தினால் இது மோசமான விளைவுகளை உண்டாக்கக்கூடும். எடுத்துக்காட்டாக எச்ஐவி( HIV)வைரஸின் பாதிப்புகளை ஏற்படுத்த இது ஏதுவாக அமையும். ஒருவேளை எச்ஐவி வைரஸ் செல்களை பாதிக்க ஆரம்பித்தால் அதன் காரணமாக பல நோய்கள் ஏற்படக்கூடும்.
நோயெதிர்ப்பு மண்டலத்தை பொறுத்தவரை ஹெல்பர் டி செல்கள்(Helper T Cells) முக்கியமான ஒன்று. நோயை ஏற்படுத்தக்கூடிய நுண்ணுயிரிகளில் இருந்து முதலில் போராடுபவர்கள் ஹெல்பர் டி செல்கள் ஆகும். ஆனால் எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் எச்ஐவி போன்ற கொடிய வைரஸ்கள் சிடி4 கிளைக்கோ புரோட்டினுடன்(CD4 glycoproteins) பிணைக்கிறது, இது ஹெல்பர் டி செல்கள் போன்ற குறிப்பிட்ட கலங்களின் மேற்பரப்பில் காணப்படுகிறது. குறிப்பிட்ட இந்த இலக்கைப் பற்றிய சிக்கல் என்னவென்றால், நோயெதிர்ப்பு மண்டலத்தில் உடலைப் பாதுகாப்பதில் ஹெல்பர் டி செல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எச்.ஐ.வி இந்த நோயெதிர்ப்பு உயிரணுக்களுக்குப் பிணைந்து கொள்வதால், எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை மற்ற நோய்த்தொற்றுகளுக்கு ஆளாக்க முடியும்.
எச்.ஐ.வி வேகமாக உருவாவதை தடுக்க உதவும் மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன, மேலும் வைரஸ் தனது மரபணுவை இணைக்காமல் இருப்பதற்கான வழிகளைப் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி நடைபெறுகிறது. மேலும் முக்கியமான மற்றும் ஆபத்தான வைரஸ்களை பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.
ரைனோ வைரஸ் (Rhinovirus): இந்த வகை வைரஸ் பொதுவாக காய்ச்சல், இருமல், சளி, தலைவலி போன்ற பொதுவான பிரச்சனைகளை உருவாக்குகின்றன. மேலும் இந்த வகை வைரஸ்கள் 200க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு.
இன்புளூயன்சா வைரஸ் (influenza): இந்த வகை வைரஸ் பொதுவாக ஃப்ளூ(flue) எனப்படும் ஒருவகை குளிர் காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் ஆகும்.
ஹெபடைடிஸ் ஏ (Hepatitis A ): இத்தகைய வைரஸ் பொதுவாக கல்லீரலை பாதிக்கிறது. இதன் பாதிப்பு தொடர்ந்து இருப்பின் மஞ்சள் தோல், குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவை இருக்கலாம்.
ஹெபடைடிஸ் பி (Hepatitis B ): இது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இது அசுத்தமான இரத்தம் மற்றும் உடல் திரவங்கள் மூலம் பரவுகிறது.
எச்.ஐ.வி (Human Immunodeficiency Virus-HIV): இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் சில வகையான டி செல்களை பாதிக்கிறது. நோய்த்தொற்றின் முன்னேற்றம் நோய் மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் உடலின் திறனைக் குறைக்கிறது, இது எய்ட்ஸ் (AIDS) வர வழிவகுக்கிறது.
வெஸ்ட் நைல் வைரஸ் (WNV): இது பொதுவாக கொசுக்களால் பரவுகிறது. WNV உடன் பெரும்பாலானவர்களுக்கு 80% வரை எந்த அறிகுறிகளும் காணப்படுவதில்லை, மற்றவர்கள் காய்ச்சல், தலைவலி மற்றும் பிற அறிகுறிகளை உருவாக்குகிறார்கள். WNV உடையவர்களில் 1% க்கும் குறைவானவர்களே மூளையின் வீக்கம் (என்செபலிடிஸ்) அல்லது மூளை மற்றும் முதுகெலும்பு (மூளைக்காய்ச்சல்) சுற்றியுள்ள திசுக்களின் வீக்கத்தை உருவாக்குகின்றனர்.
சார்ஸ் - கோவ் -2 (SARS-COV-2)/புதிய கொரோனா வைரஸ்: இது COVID-19 நோய்த்தொற்றை ஏற்படுத்தும் சுவாச கொரோனா வைரஸ் ஆகும். இந்த வைரஸின் முதல் பாதிப்புகள் டிசம்பர் 2019 இல் சீனாவின் வுஹானில்(Wuhan) இருந்து வந்தன. இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் மற்றும் நிமோனியா ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
இவைகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட சில வைரஸ்களை வகைகளே ஆகும். இன்னும் பல வைரஸ்கள் பலவிதமான நோய்த் தொற்றுக்களை உண்டாக்குகின்றன. இந்த கட்டுரையின் மூலம் வைரஸ்களை பற்றியும், நோய் ஏற்படுத்தும் முறைகளைப் பற்றியும் சில அடிப்படைத் தகவல்களை கொடுத்துள்ளோம். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.